February 11, 2016

மகாகவி பாரதியாரின் கவிதைப்போட்டி’2015 - மூன்றாம் பரிசுக்கவிதை

முயற்சி எனும் கவின்!
(
பாவகை: நேரிசை வெண்பா)

முயற்சி வழியினில் முட்டுக்கட் டொன்று
அயர்ச்சி கொடுத்து அலைக்கழித்- துயர்வு
இயக்கம் முடக்கி இன்னலைத் தந்து
தயக்கம் எழுப்புமதைத் தள்ளு!

தள்ளும் முயற்சியால் தாழ்வுமனப் பாங்குடன்
கொள்ளும் பயிற்சி கொடுமையின்- பள்ளமென
கள்ளுண் டவர்போல் கடமைமறந் தேநிதம்
உள்ளந் தளரும் உடல்!

உடலில் எடுத்திடும் உண்மை முயற்சி
இடறும் துயரினை இல்லா- தடக்கிக்
கடலின் அழுத்தமெனக் காரியச் சித்தியை
நடத்திக் கொடுக்கும் நடை!

நடைநேர்ப் படவமைந்து நாளும்
தடையற் றமுயற்சி தாளா .. மடையாய்
உடையா வுறுதியென உள்ளம் நடக்க
இடையூறு என்றும் இல!

இலவென்று ஏதொன்றும் இல்லை முயற்சி
பலமென்று ஆனபின்னே பாதை - உலகில்
நலமென்ற வெற்றி நனவாகும் இன்பக்
கலமென்ற நம்பிக்கை காண்!

காணும் முயற்சி கணமும் உறுதியுடன்
ஊணும் உறக்கமின்றி உற்சாக- வானுமே
நாணும் படியிங்கு நாளும் பயிற்சி
காணும் முயற்சி கவின்!

           -------- ------------  நாகினி கருப்பசாமி

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_