February 11, 2016

மகாகவி பாரதியாரின் கவிதைப்போட்டி’2015 - இரண்டாம் பரிசுக்கவிதை

மனிதம் மலர்ந்தது!

சென்னையிலே  பெருவெள்ளம் 
      செய்ததம்மா  பெருந்துயரம் ,
தன்னலத்தை  விதைத்ததால் 
       தான்வந்த  துயரமிது !
விண்விதைத்த  துளிகளால் 
       வீதிகளும்  வீடுகளும் 
மண்நனைத்து  பெருகிநிற்க 
       மக்களுக்கோ கடுந்த்துயரே!

வீடுவாசல்  இழந்தனர்,
    விதிஎண்ணி  புலம்பினர்,
தேடுபொருள்  தொலைந்ததால் 
     தேவைக்காய்  அழுதனர்,
ஓடிவாங்க  உறுபசிக்கு 
      உணவுயென  ஏதுமின்றி 
வாடிட்ட  நேரமதில்  
     வந்தனரே  நண்பர்களே! 

  நேற்றுவரை  மதம்பார்த்தோம் 
       நெஞ்சமெல்லாம்  ஜாதிசொன்னோம் !
   தூற்றுமொழி  தானெடுத்து 
        தூரப்போ  என்றுரைத்தோம் ;
   காற்றும்மேல்  பட்டாலே 
        கடுங்கோபம் தான்கொண்டோம்,
  வேற்றுமையை  பாராட்டி 
         வீதிதனில்   கொடிபிடித்தே !

மாற்றுமொழி   பகர்தற்கே 
        மனிதமதை  உணர்வதற்கே 
சாற்றுமொரு  சாட்சியாய் ,
        சமதர்மம்  பேணுதற்கே ,
 ஏற்றிவைத்த  தீபத்தால் 
        இருப்பதை  தெரிந்திடவும் 
 ஆற்றிதந்த  வெள்ளமிது 
         ஆண்டவனுக்கே சொல்லிடுவோம் !

நீர்தாண்டி    சோறு தந்தார் 
      நீள்துயரை  துடைத்துநின்றார்,
கார்பதித்த  கோரங்களை 
      கைகோர்த்து  தடுக்கவந்த்தார்,
வேர்முளைத்த  துயரமதில் 
       வேரில்லை  நாமமென்றார்!
யார்வேண்டும் இனி இங்கு 
        எல்லோரும் ஓரினமே!

பள்ளிகளும் , கோவில்களும் 
   படுத்துறங்கும்  இடமாக்கி ,
அள்ளிவந்த  துயரங்களை 
    ஆற்றோடு  போகவிட்டு
நள்ளிரவு  என்றாலும் 
     நட்போடு  துணையிருந்து 
வெள்ளத்தில் கரைசேர்த்த 

     வெகுமதியே  மனிதமான்றோ !

-----------  ந. ஜெயபாலன்

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_