இறைவணக்கம்-கவிஞர்.திரு.தமிழ்க்காதலன்

தமிழ்க்குடிலுக்காக கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் அவர்கள் இயற்றிய இறைவணக்கம்
*****
அன்பாகி அறிவாகி உணர்வாகி உயிராகி
அருவமாகி நின்ற ஆனந்தமே...!
ஊணாகி உலகெலாம் விரிந்த பொருளாகி
உருத்தாங்கி நின்ற தனிப்பொருளே...!
வடிவத்துள் வடிவெடுத்து வடிவமற்ற வடிவத்தால்
அருவுறுமாகி நின்ற பருப்பொருளே...!
விளைந்த யாவிலும் வியக்க நின்ற
வித்தே! உயிர் சத்தே!! வாழிய வாழிய,
வையகமும் வானகமும் வாழிய வாழிய,
மனிதகுலம் வாழ்க, மனிதம் வாழ்க,
மாண்புற செழித்து தமிழ் வாழ்க,
மண்ணில் எங்கும் செந்தமிழர் வாழ்க,
அழியாப்பொருளாய் அவனியில் வாழ்க,
குன்றா குணம் மங்காத புகழ்
குனியாத தலை கோணாத செங்கோல்
கொண்டவர்தாம் தமிழர் என்றே
பண்பில் உயர்த்து பாரில் நிகரிலா
பண்பாட்டில் வளர்த்து காத்து நிறுத்து
பரம்பொருளே..! அருட்பொருளே..!!
தூயமனம் பிறர்துயர் துடைக்கும் குணம்
வாழுங்கால் விருந்தோம்பி வாழ்த்தும் இனம்
வையத்துள் மூத்து தழைத்த தமிழினம்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துக..! இறையே வாழ்த்துக..!
நிலமும் நீரும் வளம்தரும் ஞாலம்
நீடித்த காலம் யாவும் நீடுழி வாழ
நின்னை சரணடைந்தே ஏத்துவோம் ஏந்தலே..!
ஏத்துக..! ஏற்புடை தமிழினம் இப்புவியில்
ஏற்றம்கொள ஏத்துக..! வாழ்த்துக வையத்துள்
அகம்புறம் சிறக்க தமிழ் வாழ,
சிந்தனையிலும் சிவந்த குறுதியிலும்
உயிராகி சிலிர்க்கும் தமிழே செழிக்க
வாழ்க வாழ்கவென வாழ்த்துக இறையே..!!

அன்புடன் தமிழ்க்குடில்_/\_
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_