February 20, 2016

மறைமலையடிகள் சொற்பொழிவு போட்டி' 2015- பரிசளிப்பு

அன்புள்ளங்களுக்கு,
”மகிழ்ச்சியுரை” smile emoticon smile emoticon
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
மறை. திரு. தாயுமானவன் அவர்கள் எழுதிய மறைமலை அடிகளாரின் பன்முகப்பார்வை நூல் திறனாய்வு விழா 2016 பிப்ரவரி மாதம் 2ந்தேதி சென்னை எஸ்பிளனேடு YMCA அரங்கத்தில் வழங்கப்பட்டது. திருமதி. விமலா மறைக்காடன் அவர்கள் தலைமை தாங்க பேராசிரியர் வாணி அறிவாளன் அவர்கள் நூல் திறனாய்வு செய்து உரையாற்றினார். உயர்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள் வரவேற்புரையாற்ற மறை தாயுமானவன் அவர்கள் ஏற்புரையாற்ற எளிமையாகவும் மிகச்சிறப்பாகவும் நிகழ்ந்தது விழா.
ஜூலை மாதம்’2015 மறைமலையடிகளாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய சொற்பொழிவு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வெற்றியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
அடிகளார் பற்றிய சொற்பொழிவு போட்டிக்கு அவரது பேரன் மறை. திரு. தாயுமானவன் அவர்கள் நடுவராக இருந்து சிறந்த படைப்பினைத் தேர்வு செய்து வழங்கினார். அடிகளாரின் நூல் திறனாய்வு விழாவில் போட்டிக்கான பரிசு வழங்கியது வெற்றியாளர்களுக்கு மட்டுமின்றி நம் தமிழ்க்குடிலுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. நூல் திறனாய்வு விழா மேடையில் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பரிசளிப்பையும் நடத்திக்கொடுத்த மறை திரு. தாயுமானவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விழாவில் வரவேற்புரையாற்றி, விழாவினைத் தொகுத்து வழங்கிய உயர்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள் நம் தமிழ்க்குடிலை அறிஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும் செய்தார். நம் தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும் நம் நிர்வாகத்தின் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் அற்புத மனிதர். தம் அனுபவக்கடலில், முத்துக்களாய் அவர் கண்டெடுத்த அறிஞர்களை நமக்கு அறிமுகப்படுத்தி தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஐயா மறைமலை அவர்களுக்கு தமிழ்க்குடில் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டி
முதல் பரிசு ஸ்டெல்லா தமிழரசி ர. - சென்னை
இரண்டாம் பரிசு ஸ்ரீ வித்யா - சென்னை
தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நன்றி.
குறிப்பு: காமராஜர் அவர்களின் பிறந்ததின கட்டுரைப்போட்டி மற்றும் மகாகவி அவர்களின் பிறந்ததின கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி.

என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில் :)

February 11, 2016

மகாகவி பாரதியாரின் கவிதைப்போட்டி’2015 - மூன்றாம் பரிசுக்கவிதை

முயற்சி எனும் கவின்!
(
பாவகை: நேரிசை வெண்பா)

முயற்சி வழியினில் முட்டுக்கட் டொன்று
அயர்ச்சி கொடுத்து அலைக்கழித்- துயர்வு
இயக்கம் முடக்கி இன்னலைத் தந்து
தயக்கம் எழுப்புமதைத் தள்ளு!

தள்ளும் முயற்சியால் தாழ்வுமனப் பாங்குடன்
கொள்ளும் பயிற்சி கொடுமையின்- பள்ளமென
கள்ளுண் டவர்போல் கடமைமறந் தேநிதம்
உள்ளந் தளரும் உடல்!

உடலில் எடுத்திடும் உண்மை முயற்சி
இடறும் துயரினை இல்லா- தடக்கிக்
கடலின் அழுத்தமெனக் காரியச் சித்தியை
நடத்திக் கொடுக்கும் நடை!

நடைநேர்ப் படவமைந்து நாளும்
தடையற் றமுயற்சி தாளா .. மடையாய்
உடையா வுறுதியென உள்ளம் நடக்க
இடையூறு என்றும் இல!

இலவென்று ஏதொன்றும் இல்லை முயற்சி
பலமென்று ஆனபின்னே பாதை - உலகில்
நலமென்ற வெற்றி நனவாகும் இன்பக்
கலமென்ற நம்பிக்கை காண்!

காணும் முயற்சி கணமும் உறுதியுடன்
ஊணும் உறக்கமின்றி உற்சாக- வானுமே
நாணும் படியிங்கு நாளும் பயிற்சி
காணும் முயற்சி கவின்!

           -------- ------------  நாகினி கருப்பசாமி

மகாகவி பாரதியாரின் கவிதைப்போட்டி’2015 - இரண்டாம் பரிசுக்கவிதை

மனிதம் மலர்ந்தது!

சென்னையிலே  பெருவெள்ளம் 
      செய்ததம்மா  பெருந்துயரம் ,
தன்னலத்தை  விதைத்ததால் 
       தான்வந்த  துயரமிது !
விண்விதைத்த  துளிகளால் 
       வீதிகளும்  வீடுகளும் 
மண்நனைத்து  பெருகிநிற்க 
       மக்களுக்கோ கடுந்த்துயரே!

வீடுவாசல்  இழந்தனர்,
    விதிஎண்ணி  புலம்பினர்,
தேடுபொருள்  தொலைந்ததால் 
     தேவைக்காய்  அழுதனர்,
ஓடிவாங்க  உறுபசிக்கு 
      உணவுயென  ஏதுமின்றி 
வாடிட்ட  நேரமதில்  
     வந்தனரே  நண்பர்களே! 

  நேற்றுவரை  மதம்பார்த்தோம் 
       நெஞ்சமெல்லாம்  ஜாதிசொன்னோம் !
   தூற்றுமொழி  தானெடுத்து 
        தூரப்போ  என்றுரைத்தோம் ;
   காற்றும்மேல்  பட்டாலே 
        கடுங்கோபம் தான்கொண்டோம்,
  வேற்றுமையை  பாராட்டி 
         வீதிதனில்   கொடிபிடித்தே !

மாற்றுமொழி   பகர்தற்கே 
        மனிதமதை  உணர்வதற்கே 
சாற்றுமொரு  சாட்சியாய் ,
        சமதர்மம்  பேணுதற்கே ,
 ஏற்றிவைத்த  தீபத்தால் 
        இருப்பதை  தெரிந்திடவும் 
 ஆற்றிதந்த  வெள்ளமிது 
         ஆண்டவனுக்கே சொல்லிடுவோம் !

நீர்தாண்டி    சோறு தந்தார் 
      நீள்துயரை  துடைத்துநின்றார்,
கார்பதித்த  கோரங்களை 
      கைகோர்த்து  தடுக்கவந்த்தார்,
வேர்முளைத்த  துயரமதில் 
       வேரில்லை  நாமமென்றார்!
யார்வேண்டும் இனி இங்கு 
        எல்லோரும் ஓரினமே!

பள்ளிகளும் , கோவில்களும் 
   படுத்துறங்கும்  இடமாக்கி ,
அள்ளிவந்த  துயரங்களை 
    ஆற்றோடு  போகவிட்டு
நள்ளிரவு  என்றாலும் 
     நட்போடு  துணையிருந்து 
வெள்ளத்தில் கரைசேர்த்த 

     வெகுமதியே  மனிதமான்றோ !

-----------  ந. ஜெயபாலன்

February 10, 2016

2015 மகாகவி பாரதியாரின் கவிதைப்போட்டி - முதல் பரிசுக்கவிதை

1.         கனவை  நனவாக்குவோம்

செந்தமிழே   ஆட்சிமொழி   அலுவல்  எல்லாம்
            செழுந்தமிழில்கோப்புகளில்   தமிழே   கொஞ்ச
நந்தமிழர்   பிறமொழியின்   கலப்பே   இன்றி
            நற்றமிழில்   பேசுகின்றார் !   கல்வி   எல்லாம்
செந்தமிழில் !   நீதிமன்ற    உரைக   ளெல்லாம்
            செழுந்தமிழில் !   வணிகம்செய்   கடைகள்  தம்மில்
நந்தமிழில்   பெயர்பலகை    வீதி   யெல்லாம்
            நமிதமிழின்    ஒலியன்றி    வேறு   யில்லை !

இறைவனுக்கு    வழிபாட்டுப்   போற்றி   யெல்லாம்
            இன்தமிழில் !   சமற்கிருத   ஒலியே   யின்றி
மறையாகத்   திருமுறைகள்   பிரபந்   தங்கள்
            மனமுருகப்   பாடுகின்றார்   கோயில்   தோறும்
நிறைவாகக்   குடமுழுக்கு   தமிழில்   செய்து
            நிலைத்தயருள்    பெறுகின்றார்   தமிழ  ரெல்லாம்
நறைதமிழைச்   செவ்வியலாய்   உலகே   ஏற்கும்
            நற்கனவை   நனவாக்கும்   செயலைச்  செய்வோம் !

வீட்டுமனை   யாகிவிட்ட    வயல்க   ளெல்லாம்
            விளைநிலமாய்   மீண்டுமிங்கே   மாற   வேண்டும்
காட்டைவெட்டிப்   பாழ்செய்த   மரங்க  ளெல்லாம்
            கண்முன்னே   மீண்டுமிங்கே   வளர  வேண்டும்
ஓட்டையாகி    மாசுபட்ட   ஓசோன்   வானம்
                                    தூய்மையாகி   மீண்டுமிங்கே   திகழ  வேண்டும்
கூட்டில்தன்   குஞ்சுகளுக்   கிரையை  ஊட்டும்
            குருவிகளை   மீண்டுமிங்கே   காண   வேண்டும் !

பண்ணிசைத்துக்    குடகுதாவி   வந்த   பொன்னி
            பாதையிலே   முளைத்ததடை   நீங்கி   யின்று
கண்ணகியின்   புகழ்மொழியும்   சிலம்பில்  காணும்
            காவிரியாள்   அழகுமுகம்   காண   வேண்டும்
கண்போன்ற   தஞ்சையிலே   நெற்ப   யிர்கள்
            கரும்பச்சைப்   பட்டைப்போல்   ஒளிர   வேண்டும்
தண்ணீரால்   சண்டையின்றி  மாநி  லங்கள்
            தகவுறவால்   இணைந்தநிலை    மலர   வேண்டும் !

மணல்பரந்து   காய்ந்திருக்கும்   ஆற்றி   லெல்லாம்
            மனம்துள்ள    நீர்துள்ளி   ஓட   வேண்டும்
குணமுள்ள   பெண்முகத்தில்   நாணம்   செய்யும்
            குங்குமம்போல்   சிவந்தவெள்ளம்   பாய   வேண்டும்
பிணவாடை   சாக்கடைநீர்   கலந்தி   டாத
            பிறழும்மீன்   கண்தெரியும்   தூய   நீராய்
மணம்வீசி   மலர்தவழ   திகழ   வேண்டும்
            மனம்விரும்பும்   இக்கனவை   நனவாய்ச்  செய்வோம் !

பட்டங்கள்   பலபெற்றும்   பணியே  யின்றிப்
            பரிதவித்தே   ஏங்குகின்ற    இளைஞர்   கூட்டம்
வெட்டியாகச்   சுற்றுகின்ற   நிலைமை   மாற
            வெறுங்கைகள்   வலிமைதனைத்   திறன்கள்   தம்மைத்
திட்டமிட்டுப்   பயன்படுத்தப்   பணிகள்   தோற்றித்
            திண்டாடல்   இல்லாத  நிலையாய்   யாகிக்
கட்டாயம்   பணிகிடைத்தே   இளைஞ   ரெல்லாம்

            கடமைசெய்யும்   கனவுதனை   நனவாய்ச்  செய்வோம் !

கவிஞர் கருமலைத்தமிழாழன்
ஓசூர்