July 06, 2015

2015 - அன்னையர் தின கட்டுரைப்போட்டி முடிவுகள்.

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம்,
2015 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தங்களுக்கு இதோ முடிவுகள் விவரம்..
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1. உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2. எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல், அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு : முனைவர் ஜ. பிரேமலதா , சேலம் -(அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. )
இரண்டாம் பரிசு : திருமதி வசந்தா ராமன், காசியாபாத், (தில்லி) - (அன்பின் அவதாரம் தாய்)
மூன்றாம் பரிசு : நர்கீஸ் பானு, ஐக்கிய அரபு அமீரகம்
- (அன்னை ஒரு வரம்)
பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க்குடிலின் தமிழ்த்தோட்டத்தில் மலர்ந்து மணம்வீசும் மலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும். இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய நடுவரின் சிறு குறிப்பு பரிசுபெற்றக் கட்டுரைகளைப் பதியும்போது அந்தந்த கட்டுரையுடன் பகிரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு: பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்தவிருக்கும் கட்டுரைப்போட்டி பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_