July 09, 2015

2015 அன்னையர்தின கட்டுரைப்போட்டி - மூன்றாம் பரிசு

மூன்றாம் பரிசு பெறுபவர் : நர்கிஸ் ஜியாவுதீன், ஐக்கிய அரபு அமீரகம்

தலைப்பு                             :  அன்னை ஒரு வரம்

அன்னை - உலகின் ஆதாரம்

உயிர்களின் வாழ்விடமாய்த் திகழும் இப்பூமிக்கு ஆதாரமாய்த் திகழ்வது எது? ஆக்ஸிஜனும் நீரும் மட்டும் பூமியை அன்னையாக்கிவிடுமா? எதனோடும் ஒப்பிட இயலா அன்னையே பூமியின் ஆதாரம் என்பேன். அதனால்தான் பூமி 'தாய்' எனும் பெயர் பெற்றாள், மேன்மையுற்றாள். இப்புவியில் நிறைந்திருக்கும் உயிர்களில் உணர்வால் வாழ்பவையே எண்ணிக்கையில் அதிகம். ஆறாம் அறிவுபடைத்த மனித இனம் உணர்வை இழந்து வாழ்வது சாத்தியமில்லை. அப்படியான உணர்வுகளில் உன்னதமாக போற்றப்படுவது தாயெனும் உணர்வு.

அன்னை - உறவின் ஆதாரம்

மனித இனம் வேண்டுமானால் பெற்றோரைத்தவிர பல்வேறு உறவுகளைக் கொண்டிருக்கலாம். அத்தனை உறவுகளில் சிலவற்றைப் போற்றவும் சிலவற்றைத் தூற்றவும் செய்யலாம். அத்தனையிலும் அன்னை என்னும் உறவை மேன்மையாகக் கொண்டாடவும் செய்யலாம். ஆனால் அன்னை என்னும் உறவு மனித இனத்தால் கணக்கிடப்படுவது அன்றி, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளாலும் உணரப்பட்டும், உயர்வாகப் பேணப்பட்டும் வருகின்ற ஒரு உணர்வு. எனவே, அன்னை என்னும் உறவு அனைத்து உயிரின்ங்களுக்கும் ஒரு இன்றியமையாத, மறுக்க முடியாத, பிரிக்க முடியாத ஒரு பந்தமாகும்.

பறவை இனத்தை எடுத்துக் கொண்டால், அன்னை தன் குஞ்சுகளுக்காக தொலைதூரத்திலிருந்து உணவு சேகரித்துக் கொண்டு வருவது, அவற்றை பாதுகாப்பாய் வளர்ப்பது, அவற்றுக்குரிய பணிகளைக் கற்றுத் தருவது, மற்றவைகளின் தாக்குதலிலிருந்து போராடிக் காப்பாற்றுவது என்று நமக்கே பாடம் கற்றுத்தரும் தாய்மையின் குணாதிசயங்கள் ஏராளம்.

உதாரணத்திற்கு, வலிமை மிகுந்த பருந்திடமிருந்து தன் குஞ்சுகளை, தன் சிறகுகளுக்குள் மறைத்துக் காப்பாற்றும் வலிமையற்ற சிறு பறவையான கோழி. இங்கே வலிமையைவிடவும், தன் பிள்ளைகளைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்னும் அதன் தாய்மை எடுக்கும் முடிவே இதன் வெளிப்பாடு. நாய், பூனை போன்றவை புதிதாய்ப் பிறந்த தன் குட்டிகளின் அருகில் யாரையும் அண்ட விடாது, காரணம் குட்டியைப் பாதுகாக்க அது வேறு யார்மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகுவதுமில்லை. கங்காரு இன்னும் ஒருபடி மேலே போய், தன் குட்டியை தன் வயிற்றில் சுமந்தவாறே தன் பயணத்தைத் தொடர்வது தாய்மையின் உச்சம். இதுபோல ஒவ்வொரு உயிரினமும் தன் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வது இயற்கையானது என்றாலும், அவ்வப்போது மாறும் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடி அவற்றைக் காப்பாற்ற முயல்வது இயற்கையை மிஞ்சும் அதன் தாய்மையின் வியப்பே! அதுதான் அன்னையருக்கான சிறப்பே!

அன்னை - நிபந்தனைகளற்ற பந்தம்

உலகில் ஒவ்வொரு உறவும் ஏதோவொரு நிபந்தனையுடனும் எதிர்பார்ப்புடனும் பிரதிபலன் எதிர்பார்த்தும் என்று ஒருவகையான நிர்பந்தத்துடன்தான் உலா வருகின்றன. இவற்றில் ஏதோவொன்று நடவாமல் போனால், அந்த உறவின் நடையும் நின்று போக்க்கூடும். சில சமயம் முறிந்துபோகவும் கூடும்.

கணவன் மனைவி துவங்கி, அண்ணன் தங்கையிலிருந்து, அத்தை மாமாவிலிருந்து, ஆசிரியர் மாணாக்கர் என்றும், ஏன் நட்பிலேகூட சிலசமயம் எதிர்பார்ப்புகளும் நிபந்தனைகளும் இல்லாமலிருப்பதில்லை. அவை ஏதோவொரு சமயத்தில் பெரிதாகி அந்த உறவுக்கே பாதகமாவது இன்றைய உலகில் கண்கூடு. உறவுகளைக் கவனமாய்க் கட்டிக்காப்பது பெரும்பாடு.

ஆனால் அத்தனையிலும் மேன்மையாய், அன்னை என்னும் உறவு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி, குழந்தை பெறுவது ஒன்றே தன் லட்சியமாய், கருவுற்ற செய்தி அறிந்த கணம் முதல் தன் நலன் மறந்து தன் குழந்தையின் நலனை மட்டுமே எண்ணி வாழத்துவங்குகிறாள். அந்த கால கட்ட்த்தில் நிகழும் எந்த ஒரு விஷயமும் அவளை பாதிப்பதில்லை, அவளது எண்ணம் முழுவதும் தாய்மை மேலோங்கி குழந்தைபற்றிய எண்ணத்திலேதான் தன் ஊனையும் உயிரையும் கரைத்து வாழ்கிறாள். 9 மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு அடியும் பார்த்துப் பார்த்து வைப்பாள். கருவிலிருக்கும் சிசுவுக்காக கசப்பான கசாயங்களையும் மன உவப்புடன் குடித்திடுவாள்.

தூக்கத்தில் புரண்டு படுத்தால் குழந்தையை குடல் சுற்றிக்கொள்ளும் ஆபத்தை எண்ணி, ஒவ்வொரு முறையும் எழுந்து அமர்ந்து பின் திரும்பிப் படுப்பதையும் ஆனந்தமாய் அனுபவிப்பாள். அக்கணங்களில் சோம்பலையும் தாய்மையால் வெல்வாள். பிடித்தவை உண்ணாமல் துறப்பாள். பத்தியத்தை பாங்காய்க் காப்பாள்.

ஒரு கவிஞர் எழுதினார்:

தன் வயிற்றில் வளரும் குழந்தை
ஆப்ரஹாம் லிங்கனாகுமோ?
அன்னை தெரசாவாகுமோ?
அதிபயங்கர கொடியவனாகுமோ?
தீவிரவாதியாகுமோ?
எதுவும் தெரியாமல் சுமப்பவள் அன்னை!
எதுவும் எதிர்பாராமல் உயிர் தருபவள் அன்னை!

அம்மா - ஆதியும் அந்தமும்

குழந்தைக்கு அவளே ஆதியாவாள்! அன்புக்கு அவளே அர்த்தமாவாள்! குழந்தையின் மகிழ்வுக்கு அவளே பொருளாவாள்! குறையற்ற மனதால் குழந்தையை நிறைவுடன் கொண்டாடுவாள்!

பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்வின் வெளிச்சமாய்த் திகழ்வாள்! ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் உற்சாகமாய் ஊக்கம் தந்தும், துவளும்போதும் தோல்வியுறும்போதும் ஆறுதல் தந்து, அரவணைத்து, அழகாய் ஆலோசனை தந்து மீண்டும் முயற்சியைத் தொடர தூண்டுகோலாகவும், வலிகளைத் தாங்கி துயரங்களிலிருந்து மீட்கும் அற்புதத் துணை அகிலத்தில் அன்னை.

அன்னை - முதல் ஆசான்

பிள்ளைகளுக்கு அன்பு முதல், பண்பு, பாசம், பாதுகாப்பு, நல்ல பழக்கவழக்கங்கள் என்று அனைத்தும் கற்றுக்கொடுக்கும் முதல் ஆசான் அன்னையே. அதனால்தான் கவிஞர் பாடினார்:

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன்
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே!

பிள்ளைகளுக்கு இயற்கையாகவே முன்னுதாரணமாய்த் திகழ்வது அன்னையர்தான். அன்னையரின் குணாதிசயங்களை ஒட்டியே குழந்தைகளின் மனநிலையும் பிரதிபலிப்பாக அமைகின்றது. பிள்ளைகளின் பலம் பலவீனம் அறிந்து அதற்கேற்றவாறு, இச்சமூகத்தில் வாழ்வை அமைத்துக் கொள்ள நல்ல ஆலோசனைகளைத் தந்து ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறாள்!

இன்றைய சூழலில் குழந்தையைப்பிரிந்து வேலைக்குப் போகும் அம்மாக்கள், ஐந்து நாட்கள் அன்பை அடக்கிக்கொண்டு, வார விடுமுறை நாட்களில் மட்டும் அத்தனை அன்பையும் பாசத்தையும் கொட்டித்தீர்ப்பது மட்டுமில்லாமல், பிற்காலத்தில் எதையும் எதிர்பாராமல் எட்ட நின்று அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் உன்னத உறவுகளாகவே நிலைத்து நிற்கின்ற அன்னையர், இப்பூவுலகின் தேவதையர்!

நடுவர் குறிப்பு: அன்னை ஒரு வரம் எனும் இந்தக்கட்டுரை கருத்தாழம் மிக்கதாக உள்ளது. மேலும் விரிவாக எழுதியிருக்கலாம். மொழிநடையில் கவனம் கொண்டு மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.  

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_