July 09, 2015

2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி - இரண்டாம் பரிசு

இரண்டாம் பரிசு பெற்றவர் : திருமதி வசந்தா ராமன், தில்லி.

தலைப்பு                               : அன்பின் அவதாரம் தாய்

மஹாபாரதத்தில் தாயின் அன்பிற்க்காக ஏங்கும் ஒரே ஒரு கதாபாத்திரம் கர்ணண். அவன் இறக்கும் முன் தாயை அருகாமையில் கண்டான். அவளின் அழுகையை உணர்ந்தான். அன்பாக ஆறுதலாக அவள் அவனைத் தேற்றிப் பேசினாள். ஆனால் அந்த அன்பினை நன்கு அனுபவித்து உணரும் முன் அவன் மண்ணோடு மண்ணானான்.

ஒரு குடும்பத்தில் பெண்களின் பங்கு தான் அதிகம். அவளின் பாசம், பரிவு, அரவணைப்பு-ஆண்களால் செய்ய முடியாத செயல்கள். ஒரு காலத்தில் தந்தை வெளியே சென்று தொழில் செய்து பணம், பொருள் கொண்டு வருவார். தாய் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வாள். அப்படி ஒரு நிலை இருந்ததால் அவள் தன் குழந்தைகளின் மேல் அன்பு செலுத்தி, அரவணைத்து, நல்ல குணம் வளர நல்லொழுக்கங்களை கற்பித்து நல்லவர்களாக வளர்க்க பெரும் பாடு படுகிறாள்.

தனக்கு உணவு இல்லையென்றாலும் எப்படியாவது கஷ்டப்பட்டு கிடைப்பதை தன் குழந்தைகளுக்கு பகிர்ந்து அன்புடன் கொடுக்கிறாள். அங்கே அவளின் அன்பு வெளியாகிறது. பாசம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பெற்ற பிள்ளைகளுக்கு தனக்கு கிடைத்ததைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு தான் குளிர்ந்த நீர் பருகித் தன் வயிற்றில் ஏற்படும் பசித் தீயை அணைத்து வாழ்பவர்கள் பலரும் இன்னமும் ஆங்காங்கே அதிகமாகவேக் காணப் படுகிறார்கள். தினமும் படுத்துத் தூங்க இடம் இல்லாமல் இருக்கும் ஏழைத் தாய்மார்கள் சாலையின் ஓரத்திலேயே படுத்து உறங்குகிறார்கள். மற்றும் ஒரு விஷயத்தை நாம் கவனித்திருப்போம். தான் குளிரில் நடுங்கினாலும் தன்னிடம் இருக்கும் மாற்றுப் புடவையை, தன் கண்மணிகளின் உடல் உறுத்தாமல் இருக்க, பாதிப் புடவையை தரையில் விரித்து, மீதிப் பாதியை மேலேப் போர்த்தி அது கலைந்துவிடாமல் தன் கையால் அவர்களை அணைத்து தானும் உறங்குபவளின் அன்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றே கூறலாம். இது அன்றும் இன்றும் எல்லா நாட்டிலும் உள்ள ஏழைத் தாயின் அன்றாட வாழ்க்கை. இதனை ஒரு தாயின் தியாகம் என்றே குறிப்பிடலாம்; தாயின் அன்பு, இவையெல்லாம் தான் பிள்ளைகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. தாய் அளவு தந்தையால் தன் குழந்தைகளின் மீது பாசத்தினை செலுத்த முடிவதில்லை.
நல்ல தாய், தந்தை அமைவது கடவுள் நமக்கு தந்த வரம். அதனை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வது நம் புத்திசாலித்தனம் என்று தான் கூற வேண்டும். பணம், குணம், வாழ்க்கை அமைப்பு இவை எல்லாம் ஒரு சேர எல்லாவற்றுக்கும் காரணகர்த்தவாக அமைவது தாயன்பு தான்.

ஒரு தாய் தன் வயிற்றில் கரு உண்டான விவரம் அறியும் நாளினை மறக்க முடியாத  நாளாக நினைப்பாள். அந்த உணர்வுகளை என்னவென்று எப்படி சொல்வேன், சொல்ல வார்த்தைகள் இல்லையே என்று எண்ணுவாள். என் உயிருடன் உறைந்திருக்கும் உயிரினை எப்போது பார்ப்போம் என்று மனதில் ஒரு ஏக்கத்துடன் அதே சமயம் அந்த நிகழ்வை எதிர் நோக்கும் ஆவல் கலந்த உணர்ச்சியும் உள்ளத்தில் தோன்றி உடலை சிலிர்க்க வைக்கும். இந்த உணர்வுகளையெல்லாம் ஆண்கள் உணர வாய்ப்பில்லை. ஆக அவர்களிடம், தாயை விட அதிகமான பாசத்தை எதிர் பார்க்கவமும் முடியாது, அவர்களால் வெளிப்படுத்திக் காட்டவும் முடியாது. கரு வயிற்றில் உருவானது முதல் தான் உண்ணும் உணவு வகைகளை தன் ருசிக்காக அன்றி கருவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே உண்ணுவாள். இது ஒரு தாயின் அன்பு, அக்கறை, பாசம் இவற்றின் வெளிப்பாடு ஆகும்.

திருமணத்திற்கு முன் ஒரு சிறு முள் காலில் குத்தி விட்டால் கூட குடும்பத்தினரை பாடாய் படுத்தி அமர்களப்படுத்தி விடுவார்கள். அப்படியான பெண்கள் திருமணத்திற்க்குப் பின் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பொழுது அதனால் ஏற்படும் வலிகளை சுகமான சுமையின் இன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றனர். சந்தோஷம் அடைகின்றனர்.

தாய் தன் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் பொழுது அன்பையும் பண்பையும் சேர்த்து ஊட்டுகிறாள். அவர்களை அலங்கரிக்கும் பொழுது பார்த்து பார்த்து, ரசித்து ரசித்து அவளின் அன்பை வெளிப்படுத்துகிறாள். அழும் குழந்தையை அரவணைத்து தாய் பால் கொடுத்து தூங்க வைப்பதும், தனக்கு பாட தெரியாவிட்டாலும் ஏதோ தெரிந்தவரை பாடி தூங்க வைப்பதும் எல்லாமே, குழந்தை வளரும் வரை, ஒரு இன்ப உலகில் சஞ்சரிப்பதைப் போல அனுபவித்து ரசிக்கிறாள். தன் குழந்தை திரும்பிப் படுக்கும் பொழுது,படுத்தபடி தலை தூக்கிப் பார்க்கும் போதும் தானும் குழந்தை ஆகிவிட்டதைப் போல படுத்து ரசித்து மகிழ்வதும், அது தவழும் போதும், படி தாண்டும் போதும் சுவர் பிடித்து எழுந்திருக்கும் போதும், கை பிடிக்காமல் கால் தடுமாற  நடக்க துவங்கும் போதும்  ஆஹா! என்ன கண்கொள்ளாக் காட்சி என ஆனந்த களி நடனம் புரிதலும், எனக்கு எவ்வளவு அழகான குழந்தையைக் கொடுத்த கடவுளுக்கு பூசை செய்து நன்றி கூறுவதும் எல்லாமே அந்தக் குழந்தையினைச் சுற்றி சுற்றியே நடக்கும் நிகழ்ச்சிகளாகவே இருக்கும்.
மகன் அல்லது மகளுக்கு 50 வயது ஆனாலும் அவர்களின் செயல்களை, அவர்களுக்குக் கிடைக்கும் புகழ்கள் எல்லாமே தனக்கே கிடைத்தது போல் மனம் மகிழ்ந்து நெஞ்சம் முழுவதும் ஆனந்தத்தில் திக்கு முக்காட நெஞ்சம் விம்ம ஆனந்தக் கண்ணீர் வடிப்பவள் தாய் மட்டுமே என்று கூறலாம். திருக்குறளில் கூறிய குறள் ஒன்றில் சொல்லியபடி :

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்”
தாய் உள்ளம் உணர்ந்த எவருக்கும் இந்த குறளின் அர்த்தம் உண்மை என்பது புலனாகிறது. படிப்பு, உத்தியோகம், திருமணம் என்று குழந்தைகளின் வாழ்வு நல்வாழ்வாக அமைய எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று தெய்வங்களிடம் முறையிட்டு பூசை செய்து வருவதும், அவர்களுக்காக விரதமிருப்பதும் எல்லாமே தாய் தான் குழந்தைகளை மேல் உள்ள அதிகப்படியான அன்பினால் செய்கிறாள்.

தாய்மையைப் போற்ற வேண்டும். தாயை மதிக்க வேண்டும். அவளின் தியாக குணத்தையும் அன்பையும் மனதில் பதித்துக் கொண்டு பெற்றோர்களைத் தங்களது மனதில் தெய்வமெனப் போற்றி அவர்களைக் கடைசி காலம் வரை தங்களுடனேயே வைத்து, அன்பும், ஆதரவும் கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது இந்தக்கால பெற்றோர்களின் வேண்டுதலாக உள்ளது.  பிள்ளைகளின் காலம் வரை பெற்றோர்களின் ஆசி அவர்களுக்கு நல்வாழ்வை அளிக்கும் என்பது நிச்சயம். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இந்த அளவு அன்பும் ஆதரவுமாக வளர்க்கிறார்கள் என்றால் பொது சேவை செய்பவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது.  தங்களது வாழ்க்கை முழுவதும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், மற்றும் அனாதைகளுக்காகவும் அர்பணித்த அன்னை தெரெசா, பாண்டிச்சேரி அன்னை, பகலிலும், இரவில் மெழுகுவர்த்தி ஏந்தியும் நோயாளிகளுக்கு சேவை செய்து ஆறுதல் கூறிய ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல் போன்றவர்களை எண்ணிப் பார்க்கும் பொழுது அன்னையர் தினத்தன்று தாய்மார்கள் அனைவரையும் மனமாற வாழ்த்தி சந்தோஷப் படுத்த வேண்டும். நாட்டிற்க்கு உதவியவர்களை நாம் அன்னை என்ற அடை மொழி கொடுத்துக் குறிப்பிடும் பொழுது அவர்களைப் பெற்ற தாய்மார்கள் உண்மையிலேயே தெய்வமாகத் தொழப்பட வேண்டிய பெண் தெய்வங்கள்.

அன்பு என்றால் அது அன்னையைக் குறிக்கும்
பாசம் என்றால் அது தாயைக் குறிக்கும்
கள்ளமில்லாத அன்பு அது எங்கே கிடைக்கும்?
அது தாயிடம் மட்டுமே கிடைக்கும்

உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் நம் நன்றியைத்தெரிவிக்கும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப் படுகிறது. அதனால் தான் கவிஞர் எழுதினார் ;
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்று தாயைக் கோவிலில் குடி கொண்டிருக்கும் தெய்வத்திற்கு சமமாக கொண்டாட வேண்டும்.
வாழ்த்துக்கள்

நடுவர் குறிப்பு: கட்டுரை உள்ளத்தை தொடுவதாக உள்ளது.  இருப்பினும் முழுமையடையாத ஒரு உணர்வு. மொழி ஆளுமையில் இன்னும் சற்று கவனம் செலுத்தலாம் என்பது எமது கருத்து.  வாழ்த்துகள்

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_