December 11, 2014

பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டி- மூன்றாம் பரிசு

நான் படைக்க விரும்பும்  சமூகம்.. - மணிமேகலை கைலைவாசன்
''பார்வைகள் வெறும் காட்சிகளைக் காண்பதற்காக
 மட்டுமல்ல..
சில தீர்வுகளைக் காண்பதற்காகவும் தான்''.

இனிதான ஒரு சமூகம் உலகமெங்கும் உருவாகவேண்டுமென்ற  ஆசை எனக்கு எப்போதும் உண்டு.

''வறுமை காணாத முகங்கள்..
வாடி நிற்காத பயிர்கள்..
அழுகை மறந்த மழலைகள் ..
சோகம் மறந்த பெண்கள் ..
வாழ்வை நேசிக்கும் முதிய குழந்தைகள் ..
அழகைமட்டும் சுமக்கும் இயற்கை..
அழியாத நட்பு..
என்று எத்தனையோ  ..எத்தனையோ..
பாரதி மனம் மகிழ் வான்...என் நம்பிக்கைகளோடு  தொடர்கிறேன்.

உலகப்படம் கண்முன்னே எத்தனை அழகாய் சுழல்கிறது பாருங்கள் ?
ஆனால் அதற்குள் வாழும் சமுதாயம் ?  ?..
முழுமையான  அழகோடு தானா..?
வினாக்கள் மேலும் மேலும் வினாக்களாகவே தொடர்கின்றன.விடைகள்..இன்னமும் கண்டுபிடிக்கப் படாதவைகளாகவே.

       மனித இனம் இயற்கையுடன் சேர்ந்து படைக்கப் பட்ட விதம் .நோக்கம் மகிழ்ச்சி மட்டுமே.
தனி மனிதனின் சந்தோசங்களில் சமுதாயத்தின் பங்கும் 
சமுதாயத்தின் முன்னேற்றங்களில்  தனிமனிதனது பங்கும் கட்டாயம் இருக்கவேண்டியது அவசியமே.

           கூட்டுக்  குடும்பங்களாக மனிதன் வாழ நேரிட்ட போதுஒவ்வொரு மனிதனுடைய மகிழ்ச்சியும் உடனுக்குடன் பகிரப்பட்டது.பிரச்சனைகள் ,துன்பங்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன.மன அழுத்தங்களற்ற,நோய்களற்ற இனிய சமுதாயம் மிக மிக அழகாக வாழ்த்தப்பட்டது.ஆனால் இன்று..??..தனித் தனிக் குடும்பங்கள்..தனித் தனிக் கவலைகள் தனியே உணவு தனியே உறக்கம் என்று தன்னைச் சுற்றி துன்ப   வேலி         போட்டு வாழும் மனிதன்.....விளைவு..?
இசையைத் தொலைத்த மூங்கில் காடு போலத் தான்.

                பெண்கள் பக்கம் பார்வைவையை கொஞ்சம் நகர்த்துகிறேன்.
வாழ்வியலில் பெண் அனுபவிக்கும் துன்பங்கள் ஆணை விட அதிகமென்பேன்.அதிக மனோதிடமும் ,மகா சக்தியும் கொண்டவள் பெண்தான்.ஆனாலும் அவள் திறமைகள் பெருமைகளைத் தட்டிக் கொடுக்கும் ஆணினம் மிகக் குறைவே.பெண்ணின் நிறை குணங்களைப் போற்றிட ஆண்கள் முன்வர வேண்டும்.
     தன்னில் பாதி ..  தன்    உணர்வில் பாதி உயிரில் பாதி என்று திருமண ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் கூட பெண்ணின் முன்னேற்றம்  கண்டு சற்று எரிச்சலடைவதைக் காண்பீர்கள்.இது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றே.
தாயே ஆனாலும் ,தாரமே ஆனாலும் மகளோ..,மருமகளோ,பேத்தியோ பாட்டியோ ஆனாலும் பெண் போற்றப்படவேண்டியவளே..
பெண் போற்றப்படும் இல்லங்களில் என்றும் நிரந்தர மகிழ்ச்சியே.மாறாக பெண் துன்புறுத்தப் படும் வீடுகளைப் பாருங்கள் அங்கே நிம்மதி தூரமே.
அடிப்பது  ,உதைப்பது மட்டும் துன் புறுத்தல் அல்ல..வார்த்தைகளால் நோகடிப்பதும் தான்.
பெண் பூமி என்று புகழப் படுகிறாள்.உயிரைப்பிரசவித்து தானும் மறு ஜென்மம் கண்டு தாய் எனும் பிறவி காண்கிறாள்.பெண்மையைப் போற்றிடும் சமுதாயத்தை எதிர்பார்க்கிறேன்.

 மழலைகளிடம் வருகிறேன் ..
.சிறுவர்கள் சரியான முறையில் வளர்க்கப் படுகிறார்களா..?என்ற கேள்விக்கு   இல்லை என்ற பதில் தான் எனது.வேலை வேலை என்று இரவு பகலாக உழைப்பிலேகவனம்  கொண்டவர்களால் பிள்ளைகளுக்கான பாசத்தைக் கூட சரிவர வழங்க முடியாது.
''ஓயாத தொலைக்காட்சி நாடகங்களின் கவனம் பெண்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்க மழலைகளோ  பசி மயக்கத்தில்..''
புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே ..
பாப்பா பாட்டு பாடிய பாரதி மீண்டும் வந்தால் குழந்தைகளை சரிவரக் கவனிக்காத பெற்றோரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவைத்தாலும் வைப்பான்.
           மின் கணணி.பொம்மை கூட ஆயிரம் இருந்தாலும் தாலாட்ட சில கணங்கள் போதுமே..
தாலாட்டுவது  தாய்மை மட்டுமே.தாலாட்டு மறுபடி தாயின் வாயால் 
இசைக்கப் படுமா..?என்ற நப்பாசை எனக்குள்.
அத்தனை உறவுகளையும் ஒரு பாடலுக்குள் சொல்லித் தருவது தாலாட்டல்லவா...?

   அடுத்த படியாக   முதியவர்களின்  எதிர்காலம்  எனக்குள்  வினாவாகிறது.முதுமை அனுபவங்களின் பொக்கிஷம்.ஆனாலும் முதுமை காரணமாக எதற்கும் உதவாதவர்கள் என்றெண்ணி  உடைந்த நாற்காலி போலே ஓரங் கட்டப்படுதல் வேதனை..
உடைகிறது அவர்களின் மனங்களும் இங்கே...
கணவன் மனைவி ..அவர்கள் முதுமைக் காலத்தில் இருந்தாலும் தனித் தனியே அவர்கள் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் வாழவேண்டும் என்று யாரும் ஆலோசனை சொல்லாதீர்கள்..செய்யாதீர்கள்.பிள்ளைகள் மீது கொண்ட பாசம் காரணமாக அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டாலும் மனதளவில் நொந்தும் வெந்தும்   போயிருப்பார்கள்.கடவுள் இணைத்த பந்தத்தை பிள்ளைகள் கூட பிரிக்க வேண்டாமே..

       இனி.....
..... நட்பெனும் சோலைக்குள் கொஞ்சம் நடந்து செல்கிறேன் .எத்தனை வருடங்கள் ,நூற்றாண்டுகள் கடந்தாலும் ஆணும் பெண்ணும் நட்பு என்றதும் உடல்களுடன் தொடர்பு படுத்தியே தவறாகக் காண்கின்ற சமுதாயம் தன் குப்பை  எண்ணங்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்பேன்.
''உடல் ரீதியானது நட்பல்ல ..அது மனம் ,சிந்தனை,அன்பு ரீதியானது
எந்த விண்கலமும்  தேவையில்லை மனம் என்ற வானத்தை கண்டறிய.''
கொஞ்சம் உழுது பயிர் செய்தால் போதுமென்பேன்.

        இறைவன் படைத்த அத்தனை இயற்கையும் அழகாக இருக்கிறதே  ..மனிதன் மட்டும் ஏன்அழகாக மனம் படைக்க மறுக்கிறான்..?
மறக்கிறான்..?
மனிதன் நினைத்தால்  அழகாக உருவாக்கலாம்..
உருவாக்குவானா  ?...

என்  மனதின் வண்ணங்களை புள்ளிக்  கோலங்களாய்  வரைந்திருக்கிறேன் .
இதில் கொஞ்சமாவது வாசகர்களின் எண்ணங்களைக் கவர்ந்திருந்தால் அது வெற்றியே..அத்தனை வேண்டுதல்களையும் ஒன்றாக்கிப் பாருங்கள்   அழகான கூட்டுக் குடும்பம் கண்முன்னே நிழலாடும் ..
.வாழ்க தமிழ்.  
வாழ்க பாரதி நாமம்

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_