December 11, 2014

பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டி- மூன்றாம் பரிசு

நான் படைக்க விரும்பும் சமூகம் - அபிராமி உமாசங்கர்

இப்பரந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது. பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களின் ஓட்டத்தில் வெற்றியடையும் உயிரணு தான் கருப்பையிலிருந்து வெளி வருகின்றது. வெற்றி பெற்ற மனிதனாக அப்போதே தன்னை நிரூபித்து விடுகின்றது. உயிரில் ஏது ஆண், பெண் வேறுபாடு? சமூகத்தில் இன்றும் பலர் பெண்பிள்ளை என்றால் தயங்காது சிசுக்கொலை என்று முடிவுக்குச் சென்று விடுகின்றார்கள். அதற்குப் பல்வேறு காரணங்களைச் சாக்காகக் கூறிக் கொள்கின்றார்கள். 
அடுத்து மண் ஆசை. இறந்து போனால் மண் தானே நம்மைத் தின்னப் போகின்றது. அதற்குள் எதற்கு இத்தனை உயிர்வதைகள்?
தனி மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள்: ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ ஆசைகள், விருப்பங்கள், கனவுகள் இருக்கும். அவற்றில் சிலவற்றையாவது அனுபவிப்பது கட்டாயம். 
இதைப் போன்ற பல விடயங்கள் என் மனதில் அலை மோதிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எவ்வாறு செயல்படுத்தி நான் வாழும் இச்சமூகத்தை புதிதாகப் படைக்க விரும்புகிறேன் என்பதை உங்களுடன் பகிந்து கொள்ள விரும்புகிறேன்.

பிரபஞ்சத்தில் பெண் என்பவள் இல்லாவிட்டால், எதுவுமே இல்லை. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே. மேற்குலக நாடுகளில் பெண்களை முதன்மையாகப் போற்றுகின்றார்கள். இந்தியாவிலும் கூட பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுக் கொண்டு தானிருக்கின்றது ஆனாலும் கூட, அவர்களின் வாழ்வு போராட்டம் மிக்கதாகவே இருக்கின்றது காரணம், திருமண பந்தத்தில் இணையும் பெண்களுக்கு வரதட்சணை என்னும் கொடுமை வேதனையான நிலைமையாகும். வரதட்சணைத் தடைச் சட்டம் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட போதும் கூட, இன்றும் பெண் பிறந்து விட்டால், மாபெரும் துக்கம் நடந்து விட்டதாகவே கருதுகின்றார்கள். வருங்காலத்தில் அவளுக்கான சீர் வகைகளைத் தயார் செய்வதற்கு பாடுபட வேண்டிய கட்டாயம் அவர்களைச் சிசுக்கொலை வரை செல்லத் தூண்டி விடுகின்றது. 
ஒரு பெண்ணானவள் அவளே பெரும் செல்வம். அப்படியிருக்கும்போது, எதற்காக அளவு கணக்கற்ற நகை, தொகை? கேட்டால், அவர்களது நலனுக்காக என்று பதில் வரும். தன்னையும், தன்னை நம்பி வரும் பெண்ணையும் காப்பாற்ற வகையற்றவன் எப்படி ஆண் என்ற வகைக்குள் அடங்குவான்? காப்பாற்ற வகையற்றவன், அவள் சீராகக் கொண்டு வரும் தொகையையும் விற்றுத் தானே பிழைப்பு நடத்துவான்
நான் படைக்க விரும்பும் சமூகத்தில் வரதட்சணைத் தடைச் சட்டம் என்று எழுத்தில் இருப்பதை செயலாக நடைமுறைப்படுத்துவேன். பெண்களை வெறும் போகப் பொருளாகவும், வீட்டு வேலைகளைச் செய்யும் இயந்திரங்களாகவும் மட்டுமே பார்ப்பதை நிறுத்தி விட்டு, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் ஆண்கள் மன மகிழ்வுடன் செய்வதற்கு முன்வர ஆவன செய்வேன்.

இன்றைய காலகட்டத்தில் பெண் எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கின்றாளோ, அதே அளவு ஆண்களும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. பல பேர் கூடுமிடங்களில் தற்செயலாக அவனது கை ஒரு பெண் மேல் பட்டாலும் கூட, என்னவென்று ஒரு வார்த்தை கேளாமலேயே, அடித்து, உதைத்து அவமானப்படுத்தி விடுகின்றனர். பல ஆண்கள் செய்யும் தவறுகளால், அப்பாவி ஆண்மகனும் கூடச் சேர்ந்து பாதிக்கப்படுகின்றான். வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவு சமூகத்தில் ஆண்களைத் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. உத்தியோகம் புருஷலட்சணம் என்று என்றைக்கோ, யாரோ சொல்லிவிட்டுப் போனதையே இன்னமும் பல வீடுகளில் தந்தையர் சொல்லிக் காட்டியே கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய மன வலிகளை வெளியே காட்டிக் கொள்ளாமல், குறுக்கு வழிகளில் பணம் தேட விழைகின்றனர். 

பல அரசுத் தொழில் புரிபவர்கள் தமது ஓய்வுக் காலத்தின் பின்பும் சட்டென்று இன்னொரு வேலையைத் தேடிக் கொள்ளும் திறமையோடு இருக்கின்றனர். பல்லாண்டு கால அனுபவம் அவர்களுக்குக் கை கொடுக்கின்றது. இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவ்வாறு புதிய வேலைக்கு முயற்சி செய்யும் வயதானவர்கள் இளைஞர்களுக்கு அந்த வேலை வாய்ப்பினைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாது, தகமையற்றவர்கள் சிபாரிசுடன் இலகுவாக வேளைகளில் அமர்ந்து விட, நாட்டின் பொருளாதாரம், மற்றும் முன்னேற்றம் கணிசமான அளவு பாதிப்புக்குள்ளாகின்றது. இந்தச் சூழல் கண்டிப்பாக மாற வேண்டும். தகுதியானவர்களைக் கை தூக்கி விடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் பாடுபடுவேன். நல்லதொரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பேன்.

ஆணும், பெண்ணுமற்ற மூன்றாம் பாலினத்தவர்: இயற்கையின் சூழ்ச்சிக்குப் பலியாகி தங்களின் வாழ்வைத் தொலைத்த துரதிர்ஷ்டசாலிகள் என்று தான் கூற வேண்டும். எவ்வளவு தான் நாம் வேற்றுநாட்டவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலும் கூட மனதளவில் இன்னமும் பிறரை வேடிக்கை பார்க்கும் பாமரர்களாகத் தான் இருக்கிறோம் என்பதற்கு உதாரணம், சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை நாம் நடத்தும் விதம். பொதுக் கழிப்பறைகளில் கூட அவர்களுக்கென்று ஓரிடம் ஒதுக்குவதற்கு யார் மனதும் விசாலம் இல்லை. கழிப்பறையே இந்த நிலைமையென்றால் மீதியை நான் சொல்லவும் வேண்டுமா? ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகள் இருக்கத் தான் செய்கின்றன என்று நான் முன்னரே குறிப்பட்டது போல், இவர்களிலும் திறமை மிக்கவர் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு நம்நாட்டை வல்லரசாக மாற்றுவதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். சமூகத்தில் இருக்கும் அனைவருமே நாட்டின் தூண்கள் தானே. மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினர், வறியவர்கள் என்று பாகுபாடு காட்டி அவர்களைத் தவிர்த்தால், நாடு எவ்வாறு முன்னேற்றமடையும். தூண்களே இல்லாத கட்டடமாகத் தானே பலமிழந்து போகும்? பல்லாயிரம் உயிரணுவில் வெளி உலகைப் பார்க்கும் அத்தனை உயிரணுவும் வெற்றியடைந்தவை தான்.  பிறகு ஏன் நீ சிறியவன், நான் பெரியவன் என்ற போட்டி? இவையெல்லாம் அற்ற நல்லிணக்கமான சமூகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுடைய கைகளிலும் தான். 

இன்று தனி மனிதனை மட்டுமல்லாது, அரசாங்கத்தையும் வேருடன் ஆட்டிப் படைப்பது சாதி என்ற வன்முறை. இன்று 132வது வயதில் இருந்திருக்கக் கூடிய பாரதியார், சுமார் நூற்றியைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ''சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்றார். ஆனால், இன்று வரையிலும் சாதி என்ற பேயினை ஓட்டுவதற்கு முன்வந்திருக்க வேண்டிய அரசாங்கமே, இன்று சாதிச் சங்கங்களைத் தான் நம்பியுள்ள கேவலமான நிலைமை. தேநீர்க் கடைகளில் தனிக் கோப்பை, ஒவ்வொரு சாதிகளுக்கென்று தனியான தொழில், தனியாகத் தெரு. உலக அரங்கில் இந்தியா என்ற ஒரு நாட்டிற்குள் இத்தனை பிரிவினை. சமூகத்தின் மாபெரும் கறை இந்தச் சாதிப் பாகுபாடு. ஆன்மிகவாதிகளின் கருத்து: உயிர் நிரந்தரமானது. உருவமற்ற உயிருக்கு உறைவிடம் தான் உடல். அழிந்து போகக் கூடிய உடலில் காற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கும் உயிர் குடிவருகின்றது இது தான் பிறப்பின் ரகசியம் என்று. அத்தகைய நிலையட உயிர் சிலகாலம் மட்டிலுமே குடிவரும் உடலுக்கு சாதி எதற்கு? மேல் சாதி என்று தம்மைத் தாமே கூறிக் கொள்பவர்கள், எத்தனை பேர், மேன்மையான குணங்களைப் பெற்றிருக்கின்றார்கள்? அல்லாது, கீழ்சாதி எனக் கூறி சமூகத்தில் ஒதுக்கி வைத்திருக்கும் பலபேர் இன்றளவும் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கின்றார்கள். ஆகவே, ஒரு மனிதனை சாதியின் பெயரைச் சொல்லி அவமானப் படுத்துவதை விட்டு, அவனுக்குள்ள திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி சமூகத்தில் படிந்துள்ள அழுக்குக் கறைகளை நீக்கி புத்துயிர் ஊட்டுவதற்கு முயற்சிப்பேன். 

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடு என்று பாடியிருக்கும் பாரதியாரை பாடல்களில் மட்டுமே அவ்வப்போது நினைத்து விட்டு, மறந்து விடுகின்றோம். ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலர், ஒரு நேரச் சோற்றுக்காய் கையேந்தும் மனிதரை ஒரு உயிராகக் கூட மதிப்பதில்லை. தெரு ஓரங்களிலும், சாக்கடைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரும் நம்நாட்டுக் குடிமகன் என்ற பாசம் கடுகளவு கூட இல்லாமல் சுயநலவாதிகளாகவே இருந்து விடுகின்றோம். நம்மால் முடிந்த உதவிகளை ஒவ்வொருவரும் செய்து வந்தாலே, வறுமை படிப்படியாக ஒழியும். வறுமைப்பட்ட குடும்பத்தின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலாவது சேர்த்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து நாட்டின் எதிர்கால வாரிசுகளை தகுதி மிக்கவர்களாக மாற்றுவதற்கான முயற்சி எத்தனை பேர் செய்கின்றார்கள்?

ஏழைகள் என்றுமே ஏழைகளாகவே மடிய வேண்டுமா? அவர்களுக்கான வசதிகள் அரசு தான் செய்ய வேண்டுமென எண்ணாமல், தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நம் நாடு வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் உள்ளது. ஆகவே நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வேலை, அதற்கான ஊதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்து கொடுத்து அனைவரையும் கைதூக்கி விடுவது பலமும், மற்றும் அதற்கான வசதி உள்ளவர்களின் கடமை. 

வெடிகுண்டுக் கலாச்சாரமென பரப்புரை செய்யப்பட்டு வரும் தீவிரவாதம், நாட்டின் இறையாண்மையை மிகவும் கீழ் மட்டத்திற்குக் கொண்டு சென்று விட்டது. சகோதரத்துவத்தை நாசம் செய்யும் வஞ்சகர்கள் மலிந்து விட்டனர். நாம் எல்லாரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படும் நேரமிது. நமக்குள் சண்டை போடுவதும், சாதிகளாகப் பிரிந்து நிற்பதும் எதிரிகளை நம்மை நோக்கி நெருங்க வைக்கும் பாலமாகும். இதை உணர்ந்து கொள்ளும் ஒவ்வொரு இந்தியனும் தனிமனித ராணுவமாகத் தான் கருதப்பட வேண்டும்.  தீவிரவாதமற்ற சமூகம் என்று பிறக்குமோ, அன்று தான் நாடு வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் புலப்படும். 

வீடு சிறப்பாக இருப்பதற்கு எப்படி ஒவ்வொரு வீட்டு அங்கத்தினர்களும் அயராது உழைக்கின்றார்களோ, அதுபோல் சமுதாயம் சிறப்பாக இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைத்து நாம் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் முன்னேற்றுவோமென நாட்டின் சுதந்திரத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் எழுத்து என்ற ஆயுதத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி இன்றளவும் இந்தியா மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நினைவுகளில் கலந்திருக்கும் பாரதியாரின் பிறந்தநாளில் புதிய சபதமொன்றை எடுப்போமாக!


அக்கினி என்பது மிகச் சிறிய பொறியாக இருப்பினும் காட்டையே எரித்து விடுவது போல, நாம் செய்யும் சிறு செயல் கூட மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடி வெற்றி காண்போம்; புதியதாய் ஒரு சமுதாயத்தை புத்துயிர் ஊட்டுவோம்.

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_