December 11, 2014

பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டி- முதல் பரிசு கட்டுரை

நான் படைக்க விரும்பும் சமூகம் - மீரா ஜானகிராமன்

நான் படைக்க விரும்பும் சமூகம் பொறுப்புணர்வுள்ளது. “என்ன இப்படி ஒரே வரியில் முடித்து விட்டாளே?” என்று யோசிக்கிறீர்களா? ஆம்! என்னை பொறுத்தவரையில் பொறுப்பின்மையே உலகின் மிகப்பெரிய குற்றம். பொறுப்பின்மையே வெவ்வேறு தருணங்களில் நம்பிக்கையின்மை, சுயநலம், மூர்க்கத்தனம் என்று பல்வேறு வடிவங்கள் எடுக்கிறது.
தனிமனித பொறுப்பின்மையை முதலில் எடுத்துக்கொண்டால், அது குடும்பத்தை பற்றி சிறிதும் யோசிக்காமல் குடித்து பணத்தை வீணாக்கி, மனைவி, மக்களை நடுத்தெருவில் கணவன் விடும்போது மூர்க்கத்தனமாக வெளிப்படுகிறது.
குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவர்களை வைத்துக்கொண்டே ஆபாசம், வன்முறைகள் நிறைந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் பார்க்கும் குடும்பத்தலைவியினிடத்தில் அது சுயநலமாக வெளிப்படுகிறது.
எத்தனையோ துன்பங்களுக்கிடையில் பெற்றோர் நிறைய செலவு செய்து தரமான கல்வி நிலையத்தில் படிக்கவைத்தும், குழந்தைகள் அதை உணராமல், பொறுப்பில்லாமல் கேளிக்கைகளில் நேரத்தை வீணடிக்கும் போது அது நம்பிக்கை துரோகமாக வெளிப்படுகிறது.
சமூகத்தை எடுத்துக்கொண்டால் கேட்கவே வேண்டாம். நாட்டு மக்களை பற்றிய பொறுப்பில்லாத அரசியல்வாதிகள், நாட்டின் முன்னேற்றத்தை பற்றிய பொறுப்பில்லாமல் கையூட்டு வாங்கும் அதிகாரிகள், விளைவுகளை பற்றி சிந்திக்காமல் பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் நாசவேலையில் ஈடுபடும் தீவிரவாதிகள், அமைதியை பற்றிய அக்கறையில்லாமல் போரில் ஈடுபடும் நாடுகள், பொது சொத்தில் நம் பணமும் இருக்கிறது என்பதை உணராமல் அதை சேதப்படுத்தும் வன்முறையாளர்கள், நாம் கட்டும் வரி நமக்கே நலதிட்டங்களாக வந்து சேரும் என்பதை உணராமல் வரி ஏய்ப்பு செய்யும் வியாபாரிகள், தொழிலதிபர்கள், நம் மகனோ/மகளோ நாளை கெட்டு போக்க்கூடும் என்று எண்ணாமல் வன்முறை, ஆபாசம் நிறைந்த திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இப்படி எல்லா சமூக அவலங்களுக்கும் ஆணிவேராக பொறுப்பின்மையே உள்ளது.
சரி, பொறுப்பின்மைக்கு என்ன காரணம்? பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தன்னம்பிக்கையின்மையே முதன்மையான காரணம். சுதந்திர போராட்ட காலத்தில் பல தேசபக்தர்களின் குடும்பங்கள் வறுமையில் உழன்ற போதும், பலரும் அதை கண்டும் காணாதது போல் இருந்ததற்கு நம் நாடு ஒருநாள் சுதந்திரமடையும், நம்மால் நம் நாட்டை ஆளமுடியும் என்ற நம்பிக்கையில்லாததே காரணமாகும்.
பணத்தாசை, புகழாசை, பதவியாசை என்று பல காரணங்களை சொன்னாலும், தன்னம்பிக்கையின்மையே பொறுப்பின்மையின் முதன்மையான காரணமாக இருக்கிறது. தன்னால் உழைத்து பெரும்பணம் சேர்க்கமுடியாது என்று எண்ணுபவன் குறுக்கு வழியை நாடுகிறான். தன்னால் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவரமுடியாது என்று எண்ணுவதால் தான், ‘நான் மட்டும் சொல்லி என்ன நடந்துவிட போகிறது?” என்று கூட்டத்தோடு சேர்ந்துவிடுகிறான்.
இதை எப்படி சரி செய்வது? பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க முதலில் அதை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நேர்மறையான செயல்கள் வெற்றி பெற்று அது மக்களை சென்றடையும் போது நேர்மையின் மேல் அவர்களுக்கு நம்பிக்கையுண்டாகும். அதாவது, நேர்மையின் பலன்களை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
எப்படி நிரூபிப்பது? நாம் நேர்மையாக இருந்து வெற்றி பெற்றுவிட்டால் அது பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும். எனக்கு பிறர் எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறேனோ அதை நான் மற்றவர்களுக்கு செய்யக்கூடாது. இதை ஒவ்வொருவரும் தன்னித்தில் இருந்தே தொடங்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். நாம் வெற்றி பெறும் போது அது பலருக்கும் வழிகாட்டுதலாக அமையும்.
நான் ஒரு பொறுப்புள்ள மனைவியாக, தாயாக, குடும்பத்தலைவியாக, சமூக அக்கறையுள்ள குடிமகளாக இருந்து வெற்றி பெறும் போது அது வருங்காலத்தினருக்கு நம்பிக்கையூட்டும். நம் ஒவ்வோரு செயலிலும் பொறுப்புணர்ச்சி நிறைந்திருக்கும்படி பார்த்துக்கொள்வோம். நம்மை பார்த்து பலரும் இணைவார்கள். இன்றைய அத்தியாவசிய தேவை நல்ல வழிகாட்டுதலே. விசுவாமித்திரர் தன் தன்னம்பிக்கையால் ஒரு சொர்க்கத்தையே நிர்மாணித்தார். நாம் நம் தன்னம்பிக்கையால் இந்த உலகையே சொர்க்கமாக மாற்றிவிடலாம்.
பாரதியும் தன் தன்னம்பிக்கையினாலேயே ஒளிபடைத்த பாரதத்தை படைத்தான். அவனும் இறவாதன்மையடைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறான் தன்னம்பிக்கை என்னும் அமிர்தத்தை நாம் பருகுவதோடு மற்றவர்களுக்கும் அளிக்கவேண்டும். இதனால் இந்த உலகமே அமரருலகமாகிவிடும். நாமனைவரும் அமரர்களாகிவிடுவோம்.
நான் நேர்மையான வழியில் வெற்றி பெறுவேன்!” என்று நம்பிக்கை கொள்ளுங்கள். “நான் அமரன் ! எனக்கு மரணமில்லை!” என்று உரக்க சொல்லுங்கள்.
நம் சமூகம் பொறுப்புள்ளதாக, நேர்மையானதாக, அமரத்தன்மை வாய்ந்ததாக உருவாகும் விரைவில்

5 comments:

 1. முய்ஜல் பரிசு பெற்ற அருமையான கட்டுரைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.. தொடர்ந்து நம் செயல்பாடுகளை கண்டறிந்து ஊக்கமளிக்கவேண்டுகிறோம். :)

   Delete
  2. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி !

   Delete
 2. பொறுப்பின்மையை பற்றி சிறப்பான் கட்டுரை. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி...வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி.

   Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_