December 17, 2012

மரம் நடுதல்,கல்வி உதவி - திருப்பூர் மாவட்டம்

டிசம்பர் மாதம் 17ம் தேதி திருப்பூரில் உள்ள அய்யன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குத் தேவையான சுமார் ரூ.6000/-(ஆறாயிரம்) மதிப்புள்ள 50 ஆங்கில அகராதியும், அங்கு படிக்கும் தாய்/தந்தையரை இழந்த குழந்தைகளின் தேவையை நேரில் அறிந்து அவர்களுக்கு ரூ.5000/-க்கு பொருள்கள் (ரூபாய் ஐந்தாயிரம்) வாங்கித் தரப்பட்டது.

டிசம்பர் மாதம் 17ம் தேதி திருப்பூரில் உள்ள பிச்சம்பாளையம் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.5000/-(ரூபாய் ஐந்தாயிரம்) மதிப்புள்ள ஒலிவாங்கி அமைப்பு தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கியது. மேலும்  ரூ.2000/-(ரூபாய் இரண்டாயிரம்) ரூபாய்க்கு பள்ளிக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன.

மரக்கன்று நடுதல்
நிலத்தடி நீரின் அவசியம் உணர்த்தி விழிப்புணர்வு ஊட்டல் என்ற நமது நோக்கத்தை செயல்படுத்த டிசம்பர்  மாதம்  17ந்தேதி 2012 திருப்பூரில் இருக்கும் இரண்டு அரசுப்பள்ளிகளில்(பிச்சம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிஅய்யன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிமூலம் 100 மரக்கன்றுகள் திருப்பூர் பகுதியில் நடப்பட்டது.மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை மாணவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.




சிறப்பாக வளர்ப்பவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறையாக, மூன்று வருடங்களுக்கு  இந்தப் பரிசுகளை தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சேவைப்பயணத்தில் உறுதுணையாக இருந்துவரும் அனைத்துத் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறது. தங்களுடைய தொடர்ந்த ஆதரவினை தமிழ்க்குடிலுக்கு  வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!! வெல்க தமிழ்!!!



December 12, 2012

கல்லூரி விழா பங்கேற்பு


அன்புத்தோழமைகளுக்கு,

மதுராந்தகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்த மஹாகவி பாரதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப் போட்டிக்கு, நமது தமிழ்க்குடிலைச் சார்ந்த கவிஞர் கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் மற்றும்  கவிஞர்.தமிழ் கனல் அவர்கள் இருவரும் நடுவர்களாக பங்கேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் அறிஞர்களின் அறிமுகமும், ஆதரவும் கண்டு மகிழ்ந்தோம். இந்த வாய்ப்பை நமக்கு வழங்கிய  கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழ்க்குடில் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

October 15, 2012

கோவில்பட்டியில் கல்வி உதவி...


அன்பு சொந்தங்களுக்கு,

அறக்கட்டளை துவங்கியது முதல் இதுவரை  58 குழந்தைகளின் கல்விக்கு உதவிய  தமிழ்குடில் அறக்கட்டளை தனது சேவைப்பயணத்தில் மற்றுமொரு உதவியாக உண்ணாமலை பொறியியற் கல்லூரி கோவில்பட்டியில் நான்காம் ஆண்டு படித்துவரும் மதுரையைச் சார்ந்த செல்வி.எஸ்.ஜெயசீலி என்ற மாணவிக்கு படிப்பிற்கான கட்டணத்தொகையாக ரூ.11800/-க்கான (பதினோராயிரத்து எண்ணூறு ரூபாய்) காசோலையை அவரது கல்லூரிக்கு 15/10/12 அனுப்பி வைத்தது.  (மாணவியின் நலன் கருதி, அவரின் புகைப்படம் பகிரப்படவில்லை)

நமது அறக்கட்டளை தனது நோக்கங்களை நிறைவேற்ற கரம் கோர்த்துவரும் அனைத்துத் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறது. தங்களுடைய தொடர்ந்த ஆதரவினை தமிழ்க்குடிலுக்கு  வழங்
குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!! வெல்க தமிழ்!!!

October 02, 2012

புஞ்சை புளியம்பட்டியில் கல்வி உதவி...


அன்பு சொந்தங்களுக்கு,

2012, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, சென்னை வண்டலூரில் நடைபெற்ற தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுத்தொண்டு குழு உறுப்பினர்கள் சந்திப்பில்,  கோவைக்கு அருகில் உள்ள புஞ்சை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த  ஆறு பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை வழங்கியது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் வளர்ச்சியில் தொடர்ந்து கரம் கோர்த்துவரும் அனைத்துத் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறது. தங்களுடைய தொடர்ந்த ஆதரவினை தமிழ்க்குடிலுக்கு  வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!! வெல்க தமிழ்!!!


July 15, 2012

விருதுநகரில் கல்விக்கான உதவி



தமிழ்க்குடில் அறக்கட்டளை , விருதுநகர் மாவட்டம், கார்யாப்பட்டி தாலுக்காவைச்சேர்ந்த கிராமங்களில் வசிக்கும் 17 மாணாக்கர்களுக்கு கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 
தமிழ்க்குடில் குடும்பத்தைச் சார்ந்த தோழர்.ஸ்டாலின் ஜெயச்சந்திரன் அவர்கள் நமது அறக்கட்டளையின் சார்பாக இவ்வுதவிகளை மாணாக்கர்களுக்கு சென்றடையச்செய்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.





அன்புடன் தமிழ்க்குடில்..
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

June 11, 2012

தமிழ்க்குடில் ஆண்டுவிழா - ஒரு பார்வை

தமிழ்க்குடில் அறக்கட்டளை மே மாதம் 21, 2012 அன்று பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து(பதிவு எண் 18 IV 12) நமது குடிலின் முதலாம் ஆண்டு விழா 2012, ஜூன் மாதம் 10ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது..
விழாவினை தோழி.சீதாலட்சுமி அவர்களும், தோழர்.ஸ்டாலின் ஜெயச்சந்திரன் அவர்களும் தங்கள் கனிவான குரலில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்
உயர்திரு.ஐயா.சிலம்பொலி செல்லப்பன் அவர்களும், மற்ற சிறப்பு விருந்தினர்களும் குத்துவிளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காந்தி ஆசிரமத்தை சேர்ந்த குழந்தைகள் தம் மனதை மயக்கும் மழலைக் குரலினால் இறைவணக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட விழா உற்சாகம் அடையத் துவங்கியது.
குடிலின் நிர்வாகி காயத்ரி வைத்தியநாதன் வரவேற்புரை வழங்கினார்.
விழாத்தலைவர், மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நமது குடிலைச் சேர்ந்த சகோதரர்.அன்புசிவன் அவர்கள் பொன்னாடைப் போர்த்தினார்கள்.
திக்கெட்டும் அதிர சிலம்பு இசைத்து தமிழுக்கு சிறப்பு செய்து, வாழுங்காலம் யாவும் விருதுகளிலும், விழாக்களிலும் தமிழைத் தாங்கி நிற்கும் திருவுருவமாய், சிரித்துப் பேசும் சிலப்பதிகாரமாய், முரசென முழங்கி தமிழ் வளர்த்த உயர்தகை பெரியோர், உத்தமர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் தமிழைக் கரமேந்தி, சிந்தனை கற்பூரம் ஏற்றி, தமிழர்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துரை வழங்கி நமையெல்லாம் மகிழ்விக்க...வார்த்தையில் கூறவிடமுடியாத தருணமது.
தமிழின் தேடலில் தரணியில் இலக்கியம் பேசி, சுவைமிகு சொற்கவி படைத்து, புகுமிடம் எல்லாம் தமிழின் புகழ் பரப்பி, சிந்தனை முழுக்க தமிழ்த்தேன் சிந்தி, தமிழென்றால் முந்தி நின்று சேவை செய்யும் தூயமனம் கொண்ட செங்கரும்பு சுவைத் ததும்பும் சோழத்து கவிச்சோலை, நட்புக்கு இலக்கணம் காட்டி இணைப்பு பெயர் சூட்டி, தமிழுக்கு தொண்டாற்றும் நற்கவிஞர் திரு.அறிவுமதி அவர்கள் தன் பெயருக்கேற்றவாறு அறிவார்ந்த கருத்துக்கள் செறிந்த சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.
 
மனித இனத்தின் மாண்புகள் அனைத்தும் ஒருங்கே பெற்ற தமிழினம் தன்னிலை மறந்து தடுமாறும் இவ்வேளையில், தமிழர்களையும், தமிழையும் இணைக்கும் வகையில், செயல்வடிவில் அடி எடுத்து வைக்கும் முதல் முயற்சியாக, அறக்கட்டளை தொடங்கி, தமிழ் மக்களுக்கு தொண்டு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த பொன்னான தருணத்தில் அறக்கட்டளை பற்றிய விளக்கவுரையை தமிழ்க்குடில் நிர்வாகி திருமதி.அனிதாராஜ் அவர்கள் குடிலின் நோக்கம்,செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.
செந்தமிழ் சிறக்க சொற்றமிழ் கவிமழைப் பொழிந்த கவிப்பேராற்றல் பொருந்திய நற்றமிழ் நாவில் நடனம் புரியும் சொற்கவிச்சோலை கவித்தேன் சிந்தி நம்மை களிப்படைய செய்ய, தமிழாராய் பெருகி, தமிழாய் உருகி, சுவையாய் தமிழை சுவைக்கச்செய்யும் வண்ணம் விழாத்தலைவர் உயர்திரு ஐயா.புலமை பித்தன் அவர்கள் எழுச்சிமிகு உரையாற்றி நமையெல்லாம் தமிழின் அமுத மழையில் நனைய வைத்தார்.
பூவிடைப் புகுந்து மகரந்தம் சுவைத்து மயங்கும் வண்டினம் போல், தமிழின்பால் புகுந்து அறிவால் மயங்கும் அற்புத ஆய்வாளர், தமிழுக்கு தன் குரலில் தனிக்குறள் காண விழையும் கவிதை சிற்பி, கருத்தில் கூட காந்தம் வைத்து இழுக்கும் தமிழ்க்காந்தம் தோழர் திரு,கவிஞர்.இரவா.கபிலன் அவர்கள் சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.
சிந்தனையில் கேள்வித்தேள் சுமந்து சென்றவிடமெங்கும் தமிழைக் கொட்டி, உடன் நின்றோரின் சிந்தனையில் தமிழை ஏற்றிய பண்பாளர், தமிழ் சுமந்து வாழ்க்கை சுவைத்த போராளி, தமிழருக்கும், தமிழுக்கும் நன்மை தேடித் தேடியே ஓயாது உழைக்கும் செம்மல், திரு.முருகு.இராசாங்கம் தமிழர் நாடு இதழின் ஆசிரியர் அவர்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் சிறப்பு உரையாற்றினார்.
இரசிக்கவும், ருசிக்கவும் தமிழ் தந்த விருந்தில் திளைத்து மகிழ்ந்த நம்மை, அறுசுவை விருந்தளித்து மகிழ்வித்தார் நமது குடிலின் சகோதரர்.திரு.இளையபாரதி.
தெவிட்டாத தெள்ளமுத சுவை தந்து, அள்ளக்குறையா அறுசுவை உணர்வூட்டி, ஆன்றோர் அவையிலும், காடுகழனியிலும் தமிழர் நாவில் தழைத்தோங்கும் தங்கத்தமிழை சிறப்பிக்க, தமிழ்க்குடில் கவிமுத்துக்கள் கோர்த்த கவிதை மாலைகள் சபையை அலங்கரிக்க கவியரங்கம் இனிதே அரங்கேறியது. கவியரங்கத்திற்கு தலைமை ஏற்று, நமது கவிஞர்களை வழிநடத்தினார் புதுவை தந்த மரபுக்கவி, மாண்புற தமிழ் சிறக்க தன்னை தமிழுக்கு தந்து, அன்னை தமிழுக்கு அழகு சேர்க்கும் அரும்பணியில் இன்றும் ஈடுபடும் கவிஞர்.திரு.இராஜ.தியாகராஜன் அவர்கள்..
தமிழ்க்குடில் அறக்கட்டளை அறிமுகம்: தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மூலம் மேடையில் 20 மாணாக்கர்களுக்கு உயர்திரு.ஐயா.சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் பொற்கரங்களினால் கல்விக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.
சொற்போர் நிகழ்த்த சிறந்த இடம் பட்டிமன்றம். கருத்துக்கள் மோதி மோதி சிந்தனைகள் சிதறும் போர்க்களம் இந்த பட்டிமன்றங்கள். தமிழரின் அறிவு முதிர்ச்சி வெளிப்படும் சுவைமிகும் சொற்சோலையாக விளங்கும் தமிழ்க்களம் நம் தமிழ்க்குடிலிலும் இடம்பிடித்திருந்தது. திருக்குறளில் விஞ்சியிருப்பது அறமா..? பொருளா..? இன்பமா..? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தைத் தலைமை ஏற்று நிகழ்ச்சியை சிறப்பு செய்தார் திரு.சிலம்பொலி செல்லப்பன் அவர்கள்.
விழாவிற்கு உதவியவர்களை கௌரவித்தல்: தமிழ்க்குடிலின் சிறப்பான விழா அமைப்புக்கு தொடர்ந்து தங்கள் பங்களிப்பை தந்து உதவிய அன்பு உள்ளங்களை தமிழ்க்குடில் பாராட்டி கௌரவித்தது.
 நன்றியுரை: தமிழ்க்குடிலின் நிர்வாகி தோழர்.தமிழ்க்காதலன் அவர்கள் தமிழ்க்குடிலின் விழாவினை சிறப்பிக்க வந்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டினார்கள்.
விழாவிற்கு வந்து சிறப்பித்து மகிழ்வித்த அனைத்து தோழமைகளுக்கும் நிர்வாகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. _/\_
அன்புடன் தமிழ்க்குடில்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

May 21, 2012

தமிழ்க்குடில் தோற்றம், குறிக்கோள்..

தமிழ்க்குடில் தோற்றம்: 

மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஆணிவேர் அமிழ்ந்து கிடக்கும் இடமாய் நம் தமிழகம் இருப்பதை உலகம் ஒத்துக்கொள்ளும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் இன்றைய தமிழர்களின் வாழ்வியலையும், பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும் ஒப்பு நோக்க, தமிழகம் தனது அடையாளங்களை இழந்து விட்ட இழிநிலையை தெளிவாய் உணர முடிகிறது. இந்த நிலையை உணராமலே நம் சமூகம் சுயநலம் ஒன்றே வாழ்வென்ற பொருளில் இயங்க ஆரம்பித்து வெகுகாலமாகிவிட்ட நிலையில் தமிழர்களுடைய பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் சிந்தனையில் முளைத்த சிங்கார குடில்தான் நம் தமிழ்க்குடில்.

தமிழ்க்குடிலின் குறிக்கோள்: 

1. மனிதரிடத்தில் மனிதம் வளர்த்தல். 

2.தமிழரிடத்தில் தமிழ் வளர்த்தல். 

3.தமிழால் தமிழரை வாழ்வித்தல். 

4.தமிழரால் தமிழை செழிக்கச் செய்தல்.

5.தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவித்தல்.

6.தமிழையும், தமிழரையும் இணைத்தல்,

7.தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கல்வி, மருத்துவம், வாழ்வியல் அனுபவங்களை தொகுத்து இயற்கை வழியில் சமூகத்திற்கு வழிகாட்டல். தமிழர்களின் வாழ்வியல் நலன்களைப் பேணுதல், தமிழ் வழிக்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்தல்.

8.இயற்கை மூலிகைகளை இனம் கண்டு பேணிக்காத்து வளர செய்து இயற்கையான முறையில் மருத்துவம் செய்வித்தல். தமிழர்களின் அடையாளங்கள், அழிந்துவரும் அரிய, மற்றும் அறிவியல் கலைகளை புணர்பித்து மக்களின் உபயோகத்துக்கு கொண்டு வருதல்.

9.அனைவருக்கும் பொதுவான சமச்சீரான பொருளாதாரம் கிடைக்க வழிவகை செய்து பிறர்நலன் பேணும் பொதுவான வாழ்வியலை உருவாக்குதல்.

10.மண்ணின் வளம் காத்து, சிக்கனமான முறையில், இயற்கையான உணவு உற்பத்திக்கு வழிகாட்டல். நீர்நிலைகளை பாதுகாத்து, சிக்கனமாக, பயன்படுத்த கற்றுத்தந்து நிலத்தடி நீரின் அவசியம் உணர்த்தி விழிப்புணர்வு ஊட்டல்.

11.தமிழர்களின் தொழில்முறைகளால் பொருள் ஈட்ட செய்வதன் மூலம் அவர்களின் அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டி பொருளாதார வழிவகை செய்தல். தமிழர்களின் மேன்மைதனை அனைவரும் உணரும்படியாக முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல். மனிதனுக்கு யோகக் கலைகளை கற்றுக்கொடுத்து இயற்கை சக்தியை மனிதன் பெறச்செய்தல். 

12.கூட்டுக்குடும்பத்தின் அவசியம், பெருமை உணர்த்தி குழந்தைப் பருவம் முதல் நல்லொழுக்கத்தையும், நன்றியுணர்ச்சியையும் ஊட்டி வளர்த்து மக்கள் தம் சந்ததியோடு மகிழ்வாக வாழ்வதன் மூலம், முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம் இல்லாமல் செய்தல்.

13.மனிதனிடம் மனிதம் தழைக்கச்செய்து பிறர் நலம் பேணலின் முக்கியத்துவம் உணரச்செய்தல்.

14.தாய்மொழி வழிக் கல்வி கற்பது மூலம் சிறந்த தமிழ் சமூகத்தை உருவாக்க உதவுதல், பொருளாதார ரீதியாக போராடிக் கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினருக்கு வழிகாட்டுதல்.

15.மக்களிடையே சமூக விழிப்புணர்வை தருதல், உள்கட்டமைப்பு முறைகளில் மேம்பாடடைய உதவுதல், அத்தியாவசியங்களை பூர்த்தி செய்து கொள்ள சட்ட ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உதவி செய்தல், 

16.தனிமனித வாழ்வில் நல்லொழுக்கம், நற்கருணை, நற்பண்புகள், மேலோங்க செய்தல்.

அன்புடன் தமிழ்க்குடில்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

தொடர்புக்கு...

தமிழ்க்குடில் அறக்கட்டளை,
1/95, கிழக்குத்தெருசிலம்பூர் அஞ்சல்,
ஆண்டிமடம்
உடையார் பாளையம் வட்டம்,
அரியலூர் மாவட்டம் - 608 901.
தமிழ்நாடு.
**********
Thamizhkkudil Trust,
1/95, East Street, Silamboor(Post)
Aandimadam, Udaiyarpalayam Taluk
Ariyaloor District - 608 901.
Tamil Nadu.
Mail ID  : thamizhkkudiltrust@gmail.com