October 02, 2014

விவசாயத்திட்டம்....

அன்பின் தமிழ்க்குடில் சொந்தங்களுக்கு கனிவான வணக்கம்,
தமிழ்க்காதலன் பேசுகிறேன்.
நீண்ட மாதங்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுவதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உங்களுக்கும் அப்படியே என்று நம்புகிறேன்.
கடந்த ஆறு மாதங்களாக இணையத்தில் வலம்வரும் வாய்ப்பு கிட்டவில்லை. காரணம், நமக்கு கிடைத்த அனுபவம் அப்படி.
அதை உங்களோடு பகிர விரும்புகிறேன். இதன் நோக்கம் நம்முடைய மக்களின் உண்மை நிலையை உங்கள் முன் கொண்டு வருவதுதான்.
தமிழ்க்குடிலின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அழிந்து வரும் விவசாயம், வீடுகளாக மாறி வரும் விளைநிலம், இயற்கையை பேணுதல் ஆகிய மூன்றையும் இணைத்து ஒரு நலத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் முதல்கட்டமாக விவசாயிகளோடு மூன்றுமுறை சந்திப்புகள் நிகழ்த்தி, அவர்களோடு கலந்துரையாடினோம்.
அவர்களின் நிகழ்கால நிலை, அவர்களின் தேடல், தேவை, என எல்லாமும் பேசவிட்டு, அதன்பின் அவர்களின் ஆண்டு வருமானம் என்ன என்று ஒவ்வொருவராக தனித்தனியாக விசாரித்து, யாவும் கருத்தில் கொண்டோம்.
இதன்பின் நமது திட்டத்தை வெளியிட்டோம். முதலில் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். நம்ப மறுத்தார்கள்.
ஒவ்வொரு கேள்வியாக கேட்க வைத்து கொஞ்சம் புரியவைத்தோம். ஆயினும் வெளியே சென்ற பின் வழக்கம் போல் “இதெல்லாம் நடக்குமா”, எப்படி சாத்தியம்....? மாப்பிள்ளை கம்ப்யூட்டர்ல வேலை பார்த்து வந்தவராச்சே. இவருக்கு விவசாயம் என்ன தெரியும்” என்ற பேச்சுக்கள் ஏரிக்கரை வரைக்கும் பேச ஆரம்பித்தார்கள்.
நிதானமாக யோசித்து ஒரு முடிவெடுத்தோம். எதை சாதிக்க முடியும் என்று அவர்களுக்கு சொன்னோமோ, அதை அவர்களுக்கு முன்பாக சாதித்து காட்டுவது என்று.



அதன் விளைவு, நாம் நேரடியாக விவசாயத்தில் இறங்க வேண்டிய கட்டாயம். கடந்த சித்திரை முதல் நாள் விவசாயத்தில் இறங்கினோம். தீவிரமாக களம் இறங்கி மிகுந்த சிரமங்களுக்கு இடையில், இரவு பகலாக அயராது உழைத்து, கடந்த ஐந்து மாதங்களாக நமது விவசாய முறைகளை கைக்கொண்டு பயிர் செய்துள்ளோம்.
இதன் எதிர் விளைவாக, இன்று ஊர் முழுக்க நமது விவசாயம் பேசப்படுகிறது. விவசாயிகள் மெல்ல மெல்ல சந்தேகம் விலகி, நாமும் இப்படி விவசாயம் செய்ய வேண்டும் என முயற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நாமே சொந்தமாக மூலிகை பூச்சி விரட்டிகளை தயாரித்து பயன்படுத்தி நல்ல மாற்றம் கண்டிருக்கிறோம். ஊட்ட மருந்துகளும் நாமே தயாரிக்கிறோம். அடுத்து மண்புழு உரம், மற்றும் இயற்கை எரிவாயு என தயாரிக்கும் திட்டம் இருக்கு.
நமது சிந்தனையின்படி, ஒரு விவசாயி என்பவர் சுயசார்புடையவராக இருக்க வேண்டும். அவர் மற்றவரை சார்ந்து இருக்க கூடாது. ஒரு விவசாயி தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,50,000/- குறைந்த பட்ச வருமானமாக எடுக்க வேண்டும் என்ற அடிப்படையை தார்மீக பொறுப்பாக தமிழ்க்குடிலின் விவசாய திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம்.
சில புகைப்படங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
என்றும் உங்கள் நட்புடன்,
-தமிழ்க்காதலன்.
(பயணம் தொடரும்)

1 comment:

  1. இந்தப் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_